சென்னை: நடிகை கூறிய பாலியல் வழக்கில் , தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
திருமணம் செய்வதாக ஏமாற்றி தன்னுடன் குடும்பம் நடத்திய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக நடிகை சாந்தினி காவல்துறையில் புகார் இது தொடர்பாக காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து அவரை விசாரணை செய்வதற்காகவும், ஆதாரங்களைத் திரட்டுவதற்காகவும் தனிப்படையினர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விரைந்தனர்.
இதையடுத்து தலைமறைவான மணிகண்டன், முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “மருத்துவ உதவிக்காக தான் தந்த ரூபாய் 5 லட்சத்தைத் திருப்பிக் கேட்டால் தன்னை மிரட்டுவதாகவும், பணம் பறிக்கும் நோக்கில் தன் மீது புகார் அளித்ததாகவும், மலேசியாவில் இதுபோல் நடிகை மோசடி செய்ததாகவும்” குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி வசந்தி தனது குடும்ப வாழ்க்கை சிதைக்கும் நோக்கத்தோடும், தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு துணை நடிகை சாந்தினி தனது கணவர் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டதாக கூறி துணை நடிகை சாந்தினி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் அவர்கள் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி கொடுத்த புகாரை மதுரை ஐஜி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து அங்கிருந்து சென்னை அடையாறு காவல் நிலையத்திற்கு அனுப்பி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி கொடுத்த புகாரை விசாரிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.