சென்னை: சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தமுன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீண்டும் தனது நிறுவனத்துக்கு பொறுப்பேற்று நடத்துவதாக டிவிட் பதிவிட்டுள்ளார். இதனால், அவர் அரசியலுக்கு முழுக்கு போடுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை பண்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் மா.பா.பாண்டியராஜன். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஆவடி பகுதியில், IelCielHRIndia மற்றும் mafoi_strategic என்ற பெயரில் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். அரசியலுக்கு வந்த பிறகு, நிறுவனத்தை நடத்துவதில் கவனம் செலுத்தாமல் ஒதுங்கி இருந்தார். ஆனால், தற்போது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் தி.மு.க வேட்பாளர் நாசரிடம் தோல்வியை தழுவிய நிலையில், மீண்டும் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றதுடன் நிறுவனத்தின் வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், “ நான் அமைச்சராக இருந்ததால் என்னால் நிறுவனப் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் போனது. தீவிர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். தொழிலை கவனிக்க முடியாமல் போனது. இப்போது தொழிலில் கவனம் செலுத்த முடிவு செய்து மீண்டும் பொறுப்பேற்றுள்ளேன்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொழிலில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். உங்கள் ஆதரவை எதிர்நோக்கியிருக்கிறேன் & மீண்டும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க விரும்புகிறேன்! அரசியலுக்கு கொஞ்சம் ஓய்வு அளிக்கவுள்ளேன். அதேநேரத்தில் அதிமுகவில் உள்ள பொறுப்புகளில் தொடர்வேன்” எனக் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பா.மா.பாண்டியராஜன், முதன்முதலாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். பின்னர் விஜயகாந்தின் அதிரடி நடவடிக்கை காரணமாக, பாஜகவில் இருந்து விலகி தேமுதிகவில் இணைந்து பணியாற்றினார். 2011 சட்டமன்றத்தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்டு முதன்முதலாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தேமுதிகவில், விஜயகாந்தின் மனைவியின் தலையீடு காரணமாக, அங்கிருந்து விலகியவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க-வில் இணைந்தார்.
இதையடுத்து மாபாவுக்கு 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆவடி தொகுதியில் போட்டியிட்ட மா.பா. திமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். இதனால், அவருக்கு ஜெயலலிதா, பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பதவி வழங்கினார். மேலும், அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை செயலாளராகவும் இருந்து வருகிறார்.
ஆனால், இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தொல்வி அடைந்த நிலையில், அரசியலுக்கு முழுக்கு போடும் நோக்கில், மீண்டும் தனது தொழில் நிறுவனத்தில் கவனம் செலுத்தி உள்ளார்.