சென்னை: 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலை அபகரிப்பு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில், அவருக்கு மார்ச் 11ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கள்ளஓட்டு போட வந்த திமுக நபரை தாக்கியதாக கூறப்பட்ட புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அவர்மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன. சாலை மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து, ரூ.5 கோடி தொழிற்சாலை அபகரிப்பு வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, சாலை மறியல் வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைத்துள்ள நிலையில், தற்போது 3வது வழக்கில் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ரூ.5 கோடி தொழிற்சாலை அபகரிப்பு வழக்கு தொடர்பான விசாரணை இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயக்குமாருக்கு மார்ச் 11ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.