
சென்னை:
சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தராக வணங்காமுடி இருந்தபோது, விதிகளை மீறி பலருக்கு இடம் ஒதுக்கீடு செய்தது உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான வணங்காமுடி தலைமறைவானார். அவரை கைது செய்ய போலீசார் தேடி வரும் நிலையில, மேலும் 5 பேர் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த முறைகேடுகளில் சிக்கியுள்ள சர்வாணி, பாலாஜி, அசோக்குமார், ராஜேஷ், ஜெயசங்கர் ஆகிய 5 பேரும் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையின் போது பல முறைகேடு கள் நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
அது மட்டுமின்றி, சசிகலாவின் அண்ணன் மகனும், ஜெயா தொலைக்காட்சியின் சி.இஓ.வுமான விவேக் ஜெயராமனும், வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சட்டம் படித்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், பேராசிரியர்கள் நியமனத்திலும், என்.ஆர்.ஐ. மாணவர்கள் சேர்க்கையிலும் முறைகேடு நடை பெற்றிருப்பது, அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
சட்ட பல்கலைக்கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியருக்கு என்.ஆர்.ஐ இட ஒதுக்கீட்டில் 15 சதவிகித இடங்கள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2016-2017 கல்வி ஆண்டில் 93 பேருக்கு வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு எல்.எல்.பி ஹானர்ஸ் படிப்பில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதில், 18 பேர் மட்டுமே சரியான ஆவனங்கள் கொடுத்து படிப்பில் சேர்ந்திருப்பதாகவும், மற்ற 75 பேரும் போலியான ஆவனங்கள் மூலமே சேர்க்கப்பட்டு உள்ளதும், இவர்களில் ஒருவர் விவேக் ஜெயராமன் என்பதும் தெரிய வந்துள்ளது.
அப்போதைய துணைவேந்தர் வணங்காமுடி, விதிகளை மீறி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டப்பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கொடுத்துள்ளதின் பேரில், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சட்டப்பல்கலைக்கழக துணைப் பேராசிரியர் பதவிக்கு தலா 20 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று பணி நியனம் நடைபெற்றுள்ளதையும் லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்துள்ளது.
இந்நிலையில், சட்டப்பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த வணங்காமுடியை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அழைத்த நிலையில், அவர் தலைமறைவானார். அவருக்கு உடந்தையாக இருந்தததாக கூறப்படும், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கே.எஸ்.ஷர்வானி, பாலாஜி, அசோக்குமார், ஜெய்சங்கர், ராஜேஷ் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேற்கண்ட 5 பேரும் தாங்கள் கைது செய்யப்படலாம் என அஞ்சி, முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர்.
[youtube-feed feed=1]