கான்பூர்: யோகியின் உத்திரப்பிரதேச மாநிலத்தில், இந்திய விமானப்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஒரு முன்னாள் வீரருக்கு, கொரோனா தொற்று சிகிச்சைக்கான மருத்துவமனை படுக்கை மறுக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது.
ராமா சங்கர் பஜ்பால் என்ற 79 வயதான, அந்த முன்னாள் ராணுவ சேவையாளர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருடைய ஆக்ஸிஜன் அளவு குறையத் தொடங்கியது. இதனையடுத்து, அவரின் மகன், அவரை முதலில் விமானப்படை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து, வேறு 6 மருத்துவமனைகளுக்கு, அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அனைத்து இடங்களிலுமே படுக்கை பற்றாக்குறை என்று கைவிரிக்கப்பட்டது. இதனால், வெறுத்துப்போன அவரின் மகன், தனது தந்தையை மீண்டும் வீட்டுக்கு கொண்டுவந்து, தன்னாலான சிகிச்சையை அளிக்கத் தொடங்கினார்.
ஆனால், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், கடந்த ஏப்ரல் 24ம் தேதி, பஜ்பால் மரணமடைந்துவிட்டார். ஆனால், அதற்குமுன்பாக, ஏப்ரல் 23ம் தேதி, இந்திய விமானப்படையின் முன்னாள் வீரரான தனக்கு நேர்ந்த மருத்துவமனை அலைகழிப்பு சம்பவங்கள் மற்றும் உடல்நிலை குறித்து, தனது முகநூல் பக்கத்தில் பதிவுசெய்திருந்தார். இதன்மூலம், இவர் 24ம் தேதி மறைந்துவிட்டாலும், இவருக்கு நேர்ந்த அநீதி, வெளிப்படையான முறையில் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
மறைந்த பஜ்பால், எப்போதும் உற்சாகமும், தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்டவர் மற்றும் தான் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையையும் கொண்டிருந்தார்.