சென்னை: குட்கா முறைக்கேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.

2016ம் ஆண்டு சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மாதவராவ் என்பவரின் குட்கா குடோனில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, சிக்கிய டைரியில் காவல்துறை, கலால்துறை உள்ளிட்ட பல அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த தகவல்கள் கிடைத்தன.

டைரியை ஆதாரமாக கொண்டு, சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் வீடுகளில்  சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. இந் நிலையில் முன்னாள் சட்டம் ஒழுங்கு டிஜிபியான டி.கே.ராஜேந்திரன் அடுத்த மாதம் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. அதே போன்று, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் 3ம் தேதி ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.