டில்லி: தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முன்னாள் தலைவர் அனிஷ் தயாள் சிங், (வயது 60) நியமிக்கப்பட்டு உள்ளார். மத்தியஅரசு அவரை அஜித் தோவலுக்கு உதவியாக நியமனம் செய்துள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்கு உரியவரான 80வயதான அஜித் தோவல், இருந்து வருகிறார். அவருக்கு துணையாக, , ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி அனிஷ் தயாள் சிங்கை துணை ஆலோசகராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
அனிஷ் தயாள் சிங் மணிப்பூர் கேடரைச் சேர்ந்தவர், 1988 பேட்ச் ஐ.பி.எஸ்., அதிகாரியான அனிஷ் தயாள் சிங், 30 ஆண்டுகள் உளவுத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் இந்தோ – திபெத் எல்லை படை தலைவராகவும் திறம்பட பணியாற்றியவர். குறிப்பாக, ஜம்மு – காஷ்மீர், நக்சல் தீவிரவாதம், வடகிழக்கு கிளர்ச்சி போன்ற உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களில் பணியாற்றி இருக்கிறார்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைவராக இருந்த போது, நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில், 36க்கும் மேற்பட்ட முகாம்களை நிறுவி, நான்கு புதிய பட்டாலியன்களை சேர்த்து, படையின் இருப்பை அனிஷ் தயாள் சிங் வலுப்படுத்தினார். மேலும், 2024 லோக்சபா தேர்தல் மற்றும் ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்புக்குப் பின் நடந்த முதல் சட்டசபை தேர்தலில், பெரிய அளவிலான பாதுகாப்புப் பணிகளை நிர்வகித்தார்.
இதையடுத்து மத்தியஅரசு அவரை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமித்துள்ளது.