சேலம்: தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை என பாமக தலைவர் டாக்டர் ராமதாசுக்கு, முன்னாள் முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் கடுமையான தோல்விகளை சந்தித்துள்ள பாமகவை, மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில், அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் மாவட்டம் தோறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி வருகிறார். அப்போது கூட்டணி கட்சியான அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருவதுடன், பா.ம.க..வை தண்ணீர் விட்டு வளர்க்கவில்லை இந்த இயக்கத்தை கண்ணீர் விட்டு வளர்த்தோம். நாம் தமிழகத்தை ஆள வேண்டும். வரும் தேர்தலில் 70 முதல் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றால் நாம் ஆட்சி செய்யலாம். இனி ஒரு விதி செய்வோம். ஒரு புது விதியை உருவாக்குவோம் என பாமக தொண்டர்களையும் உசுப்பேத்தும் வகையிலும் பேசி வருகிறார்.
ராமதாசின் சமீபகால நடவடிக்கைள் அதிமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சேலம் ஓமலூரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக கூட்டணியில் பாமக உள்ளதா? என்பதை என பாமக தான் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறி னார். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை என கடுமையாக விமர்சித்ததுடன், நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் பாமக இல்லை; தனித்து போட்டியிட்டனர் என்றும் பாமக.வுக்கு நாங்கள் என்ன துரோகம் செய்தது என்பதை டாக்டர் ராமதாஸ் தான் கூற வேண்டும் என்றவர், மக்கள் ஓட்டு போடாததால் தான் சட்டமன்ற தேர்தலில் பாமக தோல்வியுற்றது என தெரிவித்தார்.
டயர் நக்கி என்று அதிமுகவை கடுமையாக விமர்சித்த ராமதாஸ், பின்னர் தனது மகனுக்கு எம்.பி. பதவி வாங்க, கடந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடனே கூட்டணி வைத்தார். அதுபோல அதிமுகவின் தயவில்தான், பாமக தலைவர் ராமதாஸ் மகன் அன்புமணி ராமதாஸ் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார் என்பதையும் மறுக்க முடியாது.