புதுடெல்லி: இந்த 2019ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் கமிஷனின் ஒருதலைபட்சமான செயல்பாடு குறித்து, முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் குழு ஒன்று, ஜனாதிபதியிடம் கடிதம் மூலமாக புகார் தெரிவித்துள்ளது.

ஆளும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படும் விதத்தால், நாடெங்கும் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில், முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் குழு ஒன்று, இதுகுறித்து நேரடியாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி முறையிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது; யோகி ஆதித்யநாத்தின் ‘மோடியின் சேனை’ என்ற மோசமான பேச்சு, நமோ டிவி ஒளிபரப்பு, செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை திட்டம் குறித்த மோடியின் உரை மற்றும் பிரதமர் குறித்த திரைப்படம் உள்ளிட்ட பாரதீய ஜனதா தொடர்பான பலவிதமான புகார்களின் மீது தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

வெறுமனே விளக்கம் கேட்பது, லேசாக எச்சரிப்பது போன்றவற்றையே செய்கிறது. இந்திய அரசியல் சட்டப்பிரிவு 324ன் படி, தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, தேர்தலை நியாயமாகவும் முறையாகவும் நடத்துவதற்குரிய செயல்பாடுகளை தேர்தல் கமிஷன் மேற்கொள்வதில்லை.

தேர்தல் கமிஷன் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டால், நமது ஜனநாயகத்தின் எதிர்காலம் மிகுந்த ஆபத்துக்குள்ளாகிவிடும்.

இந்து உணர்வு, பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் என்று மத உணர்வுகளை கிளறும் வகையில், மராட்டிய மாநிலம் வார்தாவில் நரேந்திரமோடி பேசிய ஆபத்தான பேச்சுக் குறித்து வெறுமனே அறிக்கை மட்டுமே கேட்கிறது தேர்தல் ஆணையம்.

மேலும், வாக்காளர்களுக்கான சரிபார்ப்பு காகித தணிக்கை சோதனை(VVPAT) நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் தேர்தல் கமிஷன் தயக்கம் காட்டுகிறது என்று தேர்தல் கமிஷனின் மோசமான செயல்பாடுகள் குறித்த தங்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி தரப்பிலாவது ஏதேனும் நடவடிக்கை இருக்குமா? அல்லது அங்கும் அலட்சியம்தானா? என்று கேள்வியெழுப்புகின்றனர் விமர்சகர்கள்.

– மதுரை மாயாண்டி