சென்னை: வேலைவாங்கித்தருவதாக மோசடி செய்ததாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 10ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடியது. இது தொடர்பாக, தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியும் சிங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிச்சாமி உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர் ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கிக் கொடுக்காமலும், பணத்தை திரும்பி தர மறுத்துவிட்டதாகவும், எடப்பாடி பழனிச்சாமியின் நேர்முக உதவியாளர் மணி, செல்வக்குமார் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, சேலம் மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் மணி, செல்வக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.