புதுடெல்லி: மோடியின் சேனா என்று இந்திய ராணுவத்தை கொச்சைப்படுத்திய யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக, தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார் முன்னாள் தலைமை கடற்படை தளபதி எல்.ராம்தாஸ்.
உத்திரப்பிரதேச முதல்வர் யோகியின் கருத்துக்கு எதிராக அவர் கூறியிருப்பதாவது, “முன்னாள் கடற்படை தலைமை தளபதி என்ற முறையில், யோகியின் கருத்தினால் நான் மட்டுமல்ல, இந்திய ராணுவத்தில் சேவையாற்றிய பலரும் புண்பட்டுள்ளனர்.
இந்திய ராணுவம் என்பது நாட்டுக்கானது. எந்தவொரு தனிமனிதருக்கும் சொந்தமானதல்ல. இந்திய அரசியல் சாசனத்திற்கு மட்டுமே நாங்கள் கட்டுப்பட்டவர்கள். தற்போது தேர்தல் முடியும்வரை, தலைமை தேர்தல் ஆணையர்தான் உச்ச அதிகாரம் படைத்தவர். எனவே, யோகி குறித்து அவரிடம் புகார் அளித்துள்ளேன்” என்றார்.
டெல்லி அருகே, காசியாபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், பாகிஸ்தானின் பாலகோட்டில் நடத்தப்பட்டதாக சொல்லப்படும் இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து பேசியபோது, ‘மோடியின் சேனை’ என்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.
– மதுரை மாயாண்டி