நெட்டிசன்
நா.பா.சேதுராமன் முகநூல் பதிவு
இதேநாளில் 2017 #VKRajagopalanIPS தமிழ்நாடு காவல்துறையின் நிஜஹீரோவாக வலம் வந்த திரு. வி.கே. ராஜகோபாலன் ஐபிஎஸ் அவர்களுக்கு எம் நினைவாஞ்சலி !
சென்னை போலீஸ் கமிஷனராக திரு.வீகேஆர் பணியாற்றிய போதுதான்(1996) அந்த ஆபரேசன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கொடுங்கையூர் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் கூண்டோடு சிக்கினர். அன்றைய இணைகமிஷனர் முத்துக்கருப்பன் (டி.ஜி.பி.) துணை கமிஷனர் கலிமுல்லாகான் (ஓய்வு ஐ.ஜி) உதவி கமிஷனர் ஏ.ஜி.மௌர்யா (அண்மையில் ஓய்வு பெற்ற ஐ.ஜி), இன்ஸ்பெக்டர்கள் முரளி, சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சிறப்பு அதிரடிப்படையில் 6 பேர், களத்தில் இருந்த மொத்த போலீஸ் டீமே இவ்வளவுதான் !
கொடுங்கையூரில் உள்ள ஆர்.வி.நகர் தெருவும் -கட்டபொம்மன் தெருவும் சந்திக்கும் இடத்தில் ஊரோடு ஒட்டாமல் கிடந்த வீட்டில்தான் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர்… வாரக்கணக்கில் போலீசார் கண்காணித்து திட்டத்தை நிறைவேற்றி வெற்றி கண்டனர்.
அப்போது நான் தினகரன் நிருபர். குறிப்பிட்ட ஒரு நாளின் அதிகாலையில் இப்படியொரு ஆபரேசன் நடக்கப் போவதை ஆபீசுக்கு முன்னரே சொல்லி வைத்திருந்தேன். டபுள் லைன் (ஸ்குரோலிங் போல படிக்கும்) பேஜரை அதற்கு சிலநாட்கள் முன்னர்தான் வாங்கியிருந்தேன். பேஜருக்கு ஓனராகி விட்ட தகவலையும் பெருமையாக ஆபீசில் சொல்லியிருந்தது, எனக்கே நள்ளிரவு சோதனையாக அமைந்து விட்டது.
ஆபீஸ் போனிலிருந்து தகவலை பேஜருக்குப் போட்டு விடுவார்கள். பேஜருக்கு பதிலைச் சொல்ல நடுராத்திரியில் போன் இருக்குமிடம் தேடி ஓட வேண்டும். (ஆர்.கே.நகர் 25952931, மீன்பிடித்துறைமுகம் 25951014, ராயபுரம் 25951984, தண்டையார் பேட்டை 25951648 அடுத்த ஸ்டேசன் கடைசியில் 4863, 3621) அனைத்து போலீஸ் ஸ்டேஷன் நம்பர்களும் பி.சி.ஓ.க்களாக அன்று உதவி புரிந்தன. போலீசாரின் ஆபரேசனை நேரடியாக பார்த்து பாக்கெட் கேமராவில் அதை படம் பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறதே செம த்ரில். ‘எப்படி நடைமுறைப் படுத்துவது’ ? கைகொடுத்தது சாவுமரம் !
கொடுங்கையூர் பகுதி வாசிகளுக்கு “சாவுமரம்” என்ற பெயர் மிகவும் பரிச்சயம். இருட்டி விட்டால் சாவுமரம் இருக்கும் தெருவழியாக வரமாட்டார்கள். சாவு மரத்தின் உச்சி, கிளைகள் என்று மரத்தின்பல பகுதிகளில் தூக்கிட்டு செத்தவர்கள் அதிகம் என்பதால் அந்த பீதி ! (இப்போது அபார்ட்மெண்ட் பகுதி) சாவு மரத்திலிருந்து கண்ணுக்கெட்டும் தூரத்தில்தான் தீவிரவாதிகள் தங்கியிருந்த வீடு இருந்தது.
ஆபரேசனுக்கு முதல்நாள் இரவு அந்த சாவுமரத்தின் உச்சியிலேறி உட்கார்ந்து விட்டேன்… கொட்டக் கொட்ட விழித்தபடி விடியலுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். அதிகாலை வெளிச்சம் பரவுவதற்குள் ஆபரேசனை வெற்றிகரமாக முடித்தனர் போலீசார்.
படபடவென குண்டுமழை சுவரில் பட்டுத் தெறிக்க சத்தம் கேட்டு பல வீடுகளில் லைட் எரிய ஆரம்பித்து விட்டது… மயிரிழையில் மௌர்யாவும், முரளியும் உயிர்பிழைத்தனர். குவியல் குவியலாக டெட்டனேட்டர் குச்சிகள் முதன்முதலில் சென்னையில் கிடைத்தது அப்போதுதான்…
தீவிரவாதிகள் பிடிபட்ட தகவல் நாடெங்கும் பரவ போலீஸ் டீமுக்கு பாராட்டுகள் குவிந்தது. முதல்வராக இருந்த கலைஞர், “உயிரைப்பணயம் வைத்து வெற்றிகரமாக தீவிரவாதிகளைப் பிடித்த அனைத்து போலீசாருக்கும் இரட்டிப்பு பதவி உயர்வு” என்று சட்டசபையில் அறிவித்தார். முரசொலியில் முதல் பக்கத்தில் கலைஞரின் அறிவிப்பு செய்தியாகவும் வந்தது.
ஆனால், நியாயமாக வரவேண்டிய பதவி உயர்வே வராமலும், சென்னையிலும் பணியாற்ற முடியாமலும் கொடுங்கையூர் ஆபரேசன் டீமே வெகுவிரைவில் பந்தாடப்பட்டதுதான் மிச்சம். அடுத்த ஆட்சியும் வந்தது, முதல்வராக ஜெயலலிதா பொறுப்புக்கு வந்தார்.
ஒருநாள் திரு. விகேஆர் அவர்களை கார்டனுக்கு வந்து போகும்படி தகவல் கொடுத்தார். வீகேஆரும் கார்டனுக்குப் போனார். போன சில மணித் துளிகளில் வெளியே வந்தார். என்ன நினைத்தாரோ … பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக கடிதம் கொடுத்து விட்டு தன்னுடைய சொந்த கார்டனிலேயே இருந்து கொண்டார்.
அதன்பின்னர் அவருக்கு போயஸ் கார்டனிலிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் டி.ஜி.பி.யாக வீகேஆர் இருந்தபோது முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதே வழக்குப் பதிய அனுமதி கொடுத்து அனைவரையும் வியக்க வைத்தார்.
சென்னையின் க்ரைம் ரேட் வெகுவாக குறைந்திருந்த காலமும், மிரட்டலான க்ரைம் ரெக்கார்டுகளை ஏற்படுத்திய காலமும் விகேஆர் காலம்தான். இன்னொரு விஷயம். பேட்டிகளின் போது கூட தன் முகத்தை படம் பிடிப்பதை விரும்பாதவர், வீகேஆர். இந்த புகைப்படம்தான் அவரது ஸ்டேண்டிங் போட்டோ எனலாம்,
சென்னை காவல் ஆணையர் அலுவலக ஆணையர் வரிசைப் படத்தில் இந்தப் படம்தான் இருக்கும் ! (முதல் இரண்டு வரிகளை மீண்டும் படிக்கவும்)
#நபாசேதுராமன்
பிப்.25 – 2017