சென்னை; அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் அதிமுக கட்சியில்  இருந்து விலகி, இன்று காலை  முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்துள்ளார்.

இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், இன்று (ஆக. 6) காலை, புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் புதுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் நகர்மன்ற முன்னாள் தலைவருமான கார்த்திக் வி.ஆர்.தொண்டைமான் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், தி.மு.க. அயலக அணி மாநிலச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

திமுகவில் இணைந்தது குறித்து கார்த்திக் தொண்டைமான் செய்தியாளர்களுடன் பேசுகையில், “அதிமுகவில் மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக கட்சி போகிற போக்கே சரியில்லை” என்று தெரிவித்தார்.

கார்த்திக் தொண்டைமான்,  புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் .  நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை விஜயரகுநாத தொண்டைமான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராகவும், 1967, 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவராவார். கார்த்திக் தொண்டைமான் தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் தொடங்கினார், பின்னர் திமுகவில் இணைந்தார். 2005 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் செயல்பட்டு வருகிறார்.

 இவர் புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் மற்றும் அதிமுகவின் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி தலைவராகவும் இருந்தார். ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்டார். ஆனால் அடுத்த சில வருடங்களில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். ஆனால், புதுக்கோட்டையைச் சேர்நத் அதிமுக நிர்வாகியான விஜயபாஸ்கருக்கும்- கார்த்திக் தொண்டைமான் இடையே மோதல்  நீடித்து வந்த நிலையில்,  கார்த்திக் தொண்டைமானுக்கு திமுக தரப்பில் வலைவீசப்பட்டது. அந்த வலையில்அவர் சிக்கினார்.

இதைத்தொடர்ந்து, இன்று  முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் கார்த்திக் தொண்டைமான்  திமுகவில் இணைந்துள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே  கடந்த வாரம் அதிமுகவின் மூத்த நிர்வாகியாகவும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவை திமுகவில் இணைத்து எடப்பாடி ஷாக் கொடுத்திருந்தார் ஸ்டாலின். இதைத்தொடர்ந்து இன்று  திமுகவில் புதுக்கோட்டை மன்னர் வாரிசு இணைந்திருப்பது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.