திருப்பத்தூர்: தேர்தலின்போது சொத்துக்களை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி ஆஜரானார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், தேர்தலின்போது, அதற்கான கால அவகாசம் இருக்காது என்பதால், அவர்களின் பிரமாண் பத்திரத்தை ஏற்றுக்கொள்கின்றன. பின்னர், இவை வழக்காக தாக்கல் செய்யப்பட்டாலும், பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் தேவையற்றதாகி விடுகிறது.
இந்தநிலையில், நடைபெற்று முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திரத்தில் பொய்யான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட கே.சி.வீரமணி பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், கே.சி வீரமணி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் அலுவலருக்கு உத்தரவிட்டிருந்தது. விசாரணையில் கே.சி.வீரமணி பிரமாணப் பத்திரத்தில் சொத்துக்களை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல கட்ட விசாரணைகள் நடைபெற்றுள்ள நிலையில், கடந்த விசாரணையின்போது, கே.சி.வீரமணி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்காக வந்தது. இந்த வழக்கில் ஆஜராக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, திருப்பத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வருகை தந்தார். வழக்கை விசாரித்து வரும் நீதிபதி மகாலட்சுமி முன்பு இன்று ஆஜரானார்.
பின்னர் இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.