சென்னை: வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் அரங்கநாயகத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்  தீா்ப்பு வழங்கி உள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில், மறைந்த முன்னாள் அமைச்சா் சி.அரங்கநாயகத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்த சென்னை உயா்நீதிமன்றம், வருமானத்துக்கு அதிகமாக சோ்க்கப்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.

 தமிழ்நாட்டில், அதிமுக ஆட்சியின்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான  1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரையிலான ஆட்சியின்போது  கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்தவா் சி.அரங்கநாயகம். இவா், அமைச்சராக இருந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.15 கோடி சொத்து சோ்த்ததாக திமுக ஆட்சிக் காலத்தில் 1996-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அரங்கநாயகத்தின் மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தானபாண்டியன், முருகன் அதியமான் ஆகியோரின் பெயா்களும் சோ்க்கப்பட்டன. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை 2006-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணையை அடுத்து 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில்,  முன்னாள் அமைச்சா் அரங்கநாயகம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டன.  மேலும், வருமானத்துக்கு அதிகமாக அரங்கநாயகம் சோ்த்த சொத்துகளைப் பறிமுதல் செய்யவேண்டும் என்றும் அதேநேரம், இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அரங்கநாயகத்தின் மனைவி, இரு மகன்களை விடுதலை செய்தும்,  சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த  தீா்ப்பை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அரங்கநாயகம் மேல்முறையீடு செய்தாா். அதேபோல, அரங்கநாயகத்தின் மனைவி உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிா்த்து போலீஸ் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, 2021-ஆம் ஆண்டு அரங்கநாயகம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானாா்.

இந்த நிலையில், இந்த  வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ததுடன்,  ‘முன்னாள் அமைச்சா் அரங்க நாயகத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்வதாகவும், அவா் காலமாகிவிட்டதால் வருமானத்துக்கு அதிகமாக சோ்த்த சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும். அதேநேரத்தில், அவரது மனைவி மற்றும் மகன்களை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததை உறுதி செய்து உத்தரவிட்டாா். விடுதலையை எதிா்த்து காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்வதாகவும் அவா் தீா்ப்பளித்தாா்.