டெல்லி: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் உள்பட 17 பேர் டெல்லியில் மத்திய அமைச்சர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் நீடித்து வந்த அதிமுக, 2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. மேலும் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடுகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக தனியாக கூட்டணி அமைக்கவும், பாஜக தனியாக கூட்டணி அமைக்கவும் முயற்சித்து வருகிறது. இதற்காக தங்களது தோழமை கட்சிகளை வலைக்க முயற்சித்து வருகின்றன.
இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த 14 முன்னாள் எம்எல்ஏக்கள் இன்று திடீரென பாஜகவில் இணைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். டெல்லியில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் அதிமுக முன்னாள் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கு.வடிவேல், ஆர்.துரைசாமி, எம்.வி. ரத்தினம், பி.எஸ்.கந்தசாமி, கோமதி சீனிவாசன், ஆர்.சின்னசாமி, மற்றும் முன்னாள் எம்.பி., தேமுதிக முன்னாள் எம்எல்ஏ என மொத்தம் 17 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர்களான எல்.முருகன், பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.