டெல்லி: இலவசங்கள் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதி மன்றம், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க யோசனை தெரிவித்து உள்ளதுடன், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து தலைமைநீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டு உள்ளார்.
அரசியல் கட்சிகளின் இலவசங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது. அப்படி வழங்கும் கட்சிகளை தடை செய்வது பற்றி ஆலோசிக்க முடியாது, என்று உறுதியாக கூறியது. அதே சமயம் இலவசங்கள் என்றால் எது என்று வரையறுக்க வேண்டும். கல்வியை இலவசமாக வழங்குவது இலவச திட்டமா? அல்லது அடிப்படை உரிமையா என்று பார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், திமுக அமைச்சர் பிடிஆர் தெரிவித்தை கடுமையாக சாடியது.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும்விசாரணைக்கு வந்தது. அப்போது இலவச திட்டம் வதுழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்படுவதாக தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்த வழக்கை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் அறிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற இன்றைய விசாரணையின்போது, இலவசங்கள் தொடர்பாக ஒரு முடிவை எட்டப்படுவதற்கு முன் ஒரு நீண்ட ஆழமான விவாதம் தேவை. தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் இலவசங்களை கட்டுப்படுத்துவது பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பொருளாதாரத்தை அழிக்கக்கூடிய இலவசங்களை போன்றவை கவனிக்கப்பட வேண்டிய அம்சம். இன்று எதிர்க்கட்சியில் இருப்பவர் நாளை ஆட்சிக்கு வரலாம், அப்படி வருபவர்கள் இதை நிர்வகிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.
இலவசங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்கலாம் அல்லது அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி முடிவெடுக்கலாம் என மத்தியஅரசுக்கு அறிவுறுத்திய தலைமை நீதிபதி, நாங்கள் குழு அமைப்பதற்கு ஏற்கனவே மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த விகாரத்தில் நாங்கள் ஆணையம் அல்லது குழு அமைத்தால் அதனை அரசியல் கட்சிகள் எதிர்ப்பார்கள். எனவே, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசு ஏன் ஆலோசிக்க கூடாது? என கேள்வி எழுப்பினார்.
மேலும், இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய வழக்கை டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் கூறினார்.