பிராயர் கோபாலகிருஷ்ணன்

திருவனந்தபுரம்

கேரளா மாநில அறநிலையத்துறை அமைச்சர் திருவாங்கூர் தேவஸ்தான போர்டில் ஊழல் குறித்து விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

திருவாங்கூர் தேவஸ்தான போர்டில் முன்னாள் தலைவராக இருந்தவர் பிராயர் கோபாலகிருஷ்ணன்.  அதே போர்டில் உறுப்பினராக இருந்தவர் அஜய் தரையில்.   இவர்கள் இருவரும் தப்பான ஆவணங்களை அளித்து தேவஸ்தானத்தில் இருந்து சலுகைகள் பெற்றதாக புகார் எழுந்தது.

அஜய்

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி அன்று நடந்த கமிட்டி கூட்டத்தில் இருவரும் கலந்துக் கொண்டு ரூ.1.15 கோடி மதிப்புள்ள வேலைகளுக்கு அனுமதி அளித்ததாக ஆவணங்களில் தகவல் இருக்கின்றது.   ஆனால் அதே தினத்தில் இருவரும் சபரிமலை சென்று வந்ததாக கூறி பயணப் படி பெற்றுள்ளனர்.  இதற்கும் ஆவண ஆதாரங்கள் உள்ளன.

இவற்றில் ஊழல்கள் உள்ளதாக எழுந்த புகாரை ஒட்டி கேரளா மாநில அறநிலையத் துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் முதற்கட்டமாக தேவஸ்தானம் மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.  மேலும் அவர்கள் அன்று கூட்டத்தில் கலந்துக் கொண்டது உண்மை தானா என கண்டுபிடிக்கவும் ஆணையிட்டுள்ளார்.

இதே நேரத்தில் தேவஸ்தான காரியதரிசி ஜெயகுமார் என்பவர்தான் இந்த ரூ.1.15 கோடிக்கான வேலைகளுக்கு அனுமதி அளித்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.  எனவே ஜெயகுமார் மீதும் விசாரணை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.  இது குறித்து தேவஸ்தான விசாரணை அதிகாரி, “கூட்டத்தில் நடந்தவை பற்றிய தகவல் பொய்யா அல்லது சபரிமலை சென்று வந்ததற்கான ஆவணங்கள் பொய்யா என்பது குறித்து விசாரணை நடைபெறும்.  மேலும் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற அனைத்து கூட்டங்களைப் பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.