முந்திரா துறைமுகம்
அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் முந்திரா துறைமுக விரிவாக்கத்துக்காக 1552.81 ஹெக்டேர் வனப் பகுதியை அரசு அளிக்கிறது.
முந்திரா துறைமுகம் “அதானி துறைமுகம் மற்றும் விசேஷ பொருளாதாரப் பகுதி” நிறுவனத்தால் நிர்வகிகப்பட்டு வருகிறது. இந்த துறைமுக விரிவாக்கப் பணிகளுக்காக அதானி குழுமம் 1576.81 ஹெக்டேர் நிலத்தை அரசின் வனத்துறையிடம் இருந்து கேட்டிருந்தது. அந்த நிலத்தை துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கு மட்டுமே உபயோகப்படுத்துவதாக உறுதி அளித்தது.
இதற்காக நடந்த பேச்சு வார்த்தையின் போது வனத்துறை 24 ஹெக்டேர் நிலத்தை தர மறுத்துள்ளது. அந்த நிலம் அமைந்துள்ள துருப் கிராமப் பகுதி வனத்துக்காக ஒதுக்கப்பட்ட பகுதியாகும். ஆனால் குழுமம் துறைமுக விரிவாக்க பணிகள் நாட்டின் முன்னேற்றத்துக்கு தேவையான ஒன்று எனக் கூறியது. ஆனால் வனத்துறை பெரும்பாலான துறைமுக விரிவாக்கப் பணிகள் வனத்துறைக்கு சம்பந்தம் இல்லாதவைகள் என்பதால் அந்த நிலத்தை அளிக்க மறுத்து விட்டது.
தற்போது 1552.81 ஹெக்டேர் நிலத்தை இந்தக் குழுமத்துக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ள வனத்துறை இது வெறும் கொள்கை ரீதியான ஒப்புதல் மட்டுமே என தெரிவித்துள்ளது. அதானி குழுமம் அந்த நிலங்களில் மேற்கொள்ளப் போகும் பணிகளின் முழு திட்ட விவரம் கிடைத்த பிறகே முடிவான ஒப்புதல் தரப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போது வழங்கப்பட உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் கோல்ஃப் மைதானங்கள், பூங்காக்கள், கடற்கரை ரிசார்ட்டுகள் ஆகியவைகளை கட்ட மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளதகவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அதானி குழுமத்துக்கு அளிக்கப்பட்டுள்ள இடங்களில் சுற்றுச் சூழல் பாதிக்கும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.