டில்லி

பேடிஎம் மால் நிறுவனத்தில் தணிக்கை நிறுவனம் தடவியல் தணிக்கை நடத்தியதாக எண்டிராக்கர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பேடிஎம் என்பது ஆன்லைன் பரிவர்த்தனை செய்து வரும் ஒரு புகழ்பெற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் மால் எனப்படும் வணிகப் பிரிவில் பல நிறுவனங்கள் ஆன்லைன் வணிகம் செய்து வருகின்றன. கடந்த ஏழெட்டு மாதங்களாகவே இந்த நிறுவனத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுக்றது. குறிப்பாக இந்த நிறுவனத்தின் ஊழியர்களான சோனியா தவான் மற்றும் மூவர் பல முறைகேடான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.

அத்துடன் கூகுள் பே மற்றும் போன்பே ஆகிய ஆன்லைன் பரிவர்த்தனை நிறுவனங்கள் புகழடைந்து வருவதால் பேடிஎம் நிறுவனம் புகழ் இழந்து வருகின்றது. இதனால் பல வாடிக்கையாளர்கள் பேடிஎம் இல் இருந்து மற்ற நிறுவனங்களுக்கு மாறி உள்ளனர். இந்த இரு நிகழ்வுகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என நிறுவன தலைமையகம் தெரிவிக்கின்றது. ஆயினும் மக்கள் இந்நிறுவனத்திடம் நம்பிக்கை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதை ஒட்டி பிரபல தணிக்கை நிறுவனமான இ அண்ட் ஒய் என அழைக்கபடும் எர்னெச்ட் அண்ட் யங் தணிக்கை நிறுவனம் இந்த பேடிஎம் நிறுவனத்தின் கீழ் உள்ள பல பரிவர்த்தனைகளை தடவியல் தணிக்கை செய்து வருகிறது. தடவியல் தணிக்கை என்பது குற்றவியல் நடவடிக்கைகள் மிகவும் நுண்ணிய முறையில் நடைபெறும் போது நடத்தப்படும் தணிக்கை ஆகும்.

இந்த தனிக்கையின் போது பல பரிவர்த்தனைகளை இந்நிறுவன ஊழியர்கள் மாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்த முழு விவரம் ஏதும் அறியப்படவில்லை எனினும் இந்த பரிவர்த்தனைகள் மாற்றத்தினால் பல ஊழல்களும் நிதி முறைகேடுகளும் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஊழியர்கள் நேரடியாக பரிவர்த்தனையில் ஈடுபட்டு பேடிஎம் நிறுவனத்துக்கு ஏராளமான தொகை இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

நிறுவனத்தின் பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர், “சுமார் 100 ஊழியர்கள் இவ்வாறு செய்துள்ளதாக தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடைய ஈ மெயில் மற்றும் சாட் ஆகியவைகளை ஆராய்ந்ததில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. இதை ஒட்டி அந்த ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கு விவரங்களும் சோதனை செயபட்டு வருகிறது. ஏற்கனவே எங்கள் நிர்வாகம் ஊழல் குற்றத்தை ஒட்டி சுமார் 20-25 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்திடம் அதிகம் பரிவர்த்தைனையில் உள்ள நிறுவனங்கள் அலிபாபா மற்றும் சாஃப்ட்பேங்க் ஆகிய நிறுவனக்கள் ஆகும். அலிபாபா நிறுவன பரிவர்த்தனைகளில் மோசடி நடந்துள்ளதா என்பது குறித்து அந்நிறுவனம் இதுவரை ஒன்றும் தெரிவிக்கவில்லை. சாஃப்ட்பேங்க், “எங்கள் நிறுவனத்தின் உள் விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை” என கூறி உள்ளது. அது மட்டுமின்றி ஈ அண்ட் ஒய் நிறுவனமும் இந்த தணிக்கை குறித்து விவரங்களை தெரிவிக்க மறுத்துள்ளது.

THANKS : ENTRACKR.COM