டில்லி,

த்திய அரசு அறிவித்துள்ள சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு திட்டத்தை தான் ஆதரிக்கவில்லை என்று மோடியின் நண்பரும், பிரபல யோகா குருவான பாபா ராம்தேவ் தெரிவித்து உள்ளார்.

பிரபல யோகாகுரு பாபாராம்தேவ் பதஞ்சலி என்ற பெயரில் உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், பதஞ்சலி நிறுவன விரிவாக்கத்துக்கு  வெளிநாடு முதலீடுகள் குவிந்துள்ளது. இது சர்ச்சையை  ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பதஞ்சலி நிறுவன பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்படி பதஞ்சலி மின்வணிக்கத்தில் ஈடுபட முடிவு செய்து, மின்வணிகத்தில் ஈடுபட்டு உள்ள  சில்லரை வணிக நிறுவனத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாபாராம் தேவ், இனிமேல் பதஞ்சலி பொருட்களும் ஆன் மூலம் வாங்கலாம் என்றார். அதற்காக  பதஞ்சலி மின்வணிகத்தில் இறங்கி உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், செய்தியாளர்கள், சமீபத்தில், சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீத நேரடி முதலீட்டை மோடி அரசாங்கம் அனுமதித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு திட்டத்தை தான் ஆதரிக்கவில்லை என்று கூறினார். மேலும், தான்  இந்த நிகழ்ச்சியில் எந்தவொரு அரசியல் சர்சையையும்  உருவாக்க விரும்ப வில்லை என்று  கூறி அதுகுறித்த கேள்விகளை தவிர்த்தார்.

மேலும், பதஞ்சலி பொருட்கள் மின்வணிகத்தில் விற்பனை செய்யப்படுவதற்காக ,  அமெரிக்காவின் சில்லரை வர்த்தத்துறையான அமேசான், பே-டிஎம் மற்றும் சீனாவின் அலிபாபா நிறுவனங்களுடன் பதஞ்சலி பொருட்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும், இந்த நிறுவனங்கள்  மின்வணிகம் மூலம் நமது  சுதேசி பொருட்களை விற்பனை செய்வார்கள் என்று கூறினார்.

மேலும், வெளிநாடு நிறுவனங்களுடான முதலீடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாபா ராம்தேவ், அவர்கள் பதஞ்சலி  நிறுவனத்தின் பங்குதாரர் கிடையாது என்றும்,  குறைந்த வட்டியில் பண உதவி மட்டுமே செய்துள்ளார்கள் என்றார்.

பதஞ்சலி ஒரு லாப நோக்கமற்ற நிறுவனமாக மாற்றும் திட்டத்தின்படியே தான் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மோடியின் தீவிர ஆதரவாளரான பாபா ராம்தேவ், சுதேசி பொருட்களையே வாங்க வேண்டும் என்று விளம்பரப்படுத்தியும், நமது தயாரிப்பான பதஞ்சலி பொருட்களை வாங்கி உபயோகியுங்கள் என்று விளம்பரப்படுத்தி வருகிறார்.

அதே வேளையில் மத்திய அரசோ சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்புக்கு பாபா ராம்தேவ் எதிர்ப்பு தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.