இந்திய ஈக்விட்டி பங்குச் சந்தை ஏற்றத்தால் முன் திட்டமிட்ட வர்த்தகம் மூலம் வெளிநாட்டு நிதி மற்றும் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் சுமார் ரூ. 59,000 கோடி லாபமடைந்ததாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இந்திய பங்கு சந்தையை கட்டுப்படுத்தும் செபி திங்களன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் அறிக்கையில் இதை குறிப்பிட்டுள்ளது.
அல்காரிதமிக் டிரேடிங் எனும் தானியங்கி முன் திட்டமிட்ட அதிவேக வணிகம் மூலம் வெளிநாட்டு நிதி மற்றும் தனியார் மூலதன நிறுவனங்கள் 7 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 58,840 கோடி) லாபமடைந்ததாக அதில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜேன் ஸ்ட்ரீட் குழுமம் இந்திய ஈக்விட்டி சந்தையில் பயன்படுத்திய ஒரு உத்தியின் மூலம் ரூ. 8371 கோடி ($1 பில்லியன்) லாபம் ஈட்டியதாக கடந்த ஏப்ரல் மாதம் கூறியதை அடுத்து இந்திய டெரிவேடிவ் சந்தை உலக கவனத்தை ஈர்த்தது.
பங்கு வர்த்தகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தின் அடுத்த கட்டமாக, அல்காரிதம்ஸ் என்ற சொல் பிரபலமடைந்துள்ளது, மேலும் அல்கோ-டிரேடிங்கை நம்பியிருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அல்காரிதமிக் டிரேடிங் என்பது ஒவ்வொரு பங்கு இயக்கத்தையும் பகுப்பாய்வு செய்து பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் ஒரு கணித வழிமுறையாகும். அல்காரிதமிக் டிரேடிங், கம்ப்யூட்டர்-டைரக்டட் டிரேடிங் என்றும் அழைக்கப்படுகிறது, இது மனித உழைப்பையும் பங்கு பகுப்பாய்வுக்கான நேரம் மற்றும் செலவையும் குறைக்கிறது. இந்த வர்த்தக கண்டுபிடிப்பு தேவையற்ற செலவினங்களைக் குறைத்து முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து வருமானத்தை அளிக்கிறது.
அதேவேளையில் இந்த வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்களின் பெரும்பாலான லாபம் இந்திய வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் இழப்பில் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
2024 மார்ச் மாதம் முடிவடைந்த நிதியாண்டில் இந்திய வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ரூ. 61,000 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 3.85 லட்சம் கோடி மதிப்புள்ள இந்திய டெரிவேடிவ் சந்தையில் உள்ள ஒவ்வொரு 10 சில்லறை வர்த்தகர்களில் ஒன்பது பேர் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாண்டு காலத்தில் பணத்தை இழந்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள சுமார் 1 கோடி வர்த்தகர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோரின் ஆண்டு வருமானம் ரூ. 5,00,000க்கும் குறைவாக உள்ளதாகவும். 1% பேர் மட்டுமே ரூ. 1,00,000க்கும் மேல் லாபம் ஈட்டியதாகவும் அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.