டில்லி,
5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் மார்ச் மாதம் சட்டசபையின் பதவி காலம் முடிவடையும் 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இந்த வாரம் அறிவிக்கப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளின் ஆயுட்காலம் வரும் மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது.
அதைத்தொடர்ந்து புதிய அரசு அமைக்க ஏதுவாக, சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வரும் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான. பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த 5 மாநில தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு சுமார் 1 லட்சம் பாதுகாப்பு படையினர் தேவை என்று மத்திய அரசிடம் கோரியிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன் காரணமாக 5 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.
403 தொகுதிகளைக் கொண்ட உத்திரப்பிரதேசத்தில் 5 முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்றும், உத்திரகாண்ட் மாநிலத்தில் 71 தொகுதிகளுக்கும், பஞ்சாப்பில் 117 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.