உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த 77 ஆண்டுகளில் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் தேர்ச்சி பெறுவது இதுவே முதல் முறை.

மாவட்ட மையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் நிஜாம்பூர். தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியைச் சேர்ந்த ராம்கேவல் என்ற மாணவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

ராம்கேவலின் தாய் புஷ்பா அரசுப் பள்ளியில் உணவு சமைக்கும் பணியாளராகப் பணிபுரிகிறார். அவர் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார் ஆனால் அவரது தந்தை ஜெகதீஷ் எழுதப் படிக்கத் தெரியாதவர்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த ராம்கேவல் அவரது குடும்பத்தின் பொருளாதார நிலையைக் கருதி தனது பெற்றோருடன் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

தவிர, திருமண விழாக்களின் போது விளக்குகளை எடுத்துச் சென்று ₹250–₹300 சம்பாதிப்பது வந்த அவரை அவரது தந்தை படிக்கச் சொல்லி ஊக்குவித்தார்.

கூலித் தொழிலாளியாக வேலை செய்து கொண்டே படித்து வந்த ராம்கேவல் 10ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்த கிராமத்தில் உள்ள பலர் கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் பெரும்பாலான மாணவர்களுக்கு, பகுதிநேர வேலை செய்து கொண்டே தேர்வில் தேர்ச்சி பெறுவது ஒரு சவாலாக இருந்தது.

இந்த நிலையில் 10ம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவரின் சாதனையை அங்கீகரித்து மாவட்ட ஆட்சியர் சஷாங்க் திரிபாதி பாராட்டினார். அவருடைய கல்விக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்குவதாக மாவட்ட கல்வி அதிகாரி உறுதியளித்துள்ளார்.

தேர்வில் வெற்றிபெற்றது குறித்து கூறியபோது, “நான் வேலையிலிருந்து வீடு திரும்பும்போது இரவு வெகுநேரமாகிவிடும்” ஆனாலும், நான் இரண்டு மணி நேரம் பயிற்சி செய்துவிட்டு படுக்கைக்குச் செல்வேன். “கிராமத்தில் சிலர் நான் 10 ஆம் வகுப்பு தேர்வில் ஒருபோதும் தேர்ச்சி பெற முடியாது என்று கேலி செய்வார்கள்,” என்று ராம்கேவல் உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.

தற்போது, ராம்கேவலின் சாதனை கிராமத்தில் உள்ள மற்ற மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள். 10 ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த சில மாணவர்கள், இந்தச் சிறுவனின் சாதனையால் ஈர்க்கப்பட்டு, மீண்டும் தேர்வெழுத முடிவு செய்துள்ளனர்.

முதல்முறையாக அந்த கிராமத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதன் மூலம் நிஜாம்பூர் கிராமத்தில் ஒரு தலைமுறைக்கே கலங்கரை விளக்கமாக ராம்கேவல் மாறியுள்ளதாக பெருமையுடன் கூறப்படுகிறது.