லக்னோ:
தந்தை உடல் நலம் குன்றி படுத்தபடுக்கையானபோது, கத்தியை கையில் எடுத்தனர் அவரது மகள்கள். முடிதிருத்தும் தொழிலில் தீவிரம் காட்டினர்.
அவர்கள் ஒழுங்காக முடி திருத்துவார்களா? என்ற நம்பிக்கை அந்த ஊர்க்காரர்களுக்கு ஏற்படவில்லை. ஆணாக மாறினார்கள். அசத்தினார்கள். இந்திய அரசின் பாராட்டையும் பெற்றார்கள்.
பெண்களுக்கு தன்னம்பிக்கையின் அடையாளமாக திகழ்பவர்கள் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் குக்கிராமத்தைச் சேர்ந்த ஜோதி குமாரி(18) மற்றும் நேஹா(16).
2014-ம் ஆண்டு உடல்நலம் குன்றிய தந்தை படுத்த படுக்கையானார். திகைத்துப் போனது குடும்பம். அப்போதுதான், தன் தந்தை நடத்தி வந்த முடிதிருத்து கடையை சகோதரிகள் இருவரும் திறந்தார்கள்.
அவர்கள் கதவை மட்டும் திறக்கவில்லை…பிரகாசமான வாழ்க்கையையும் சேர்ந்தே திறந்தோம் என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.
கடையை திறந்ததும் சோதனை கத்தி முனையில் மிரட்டியது. அந்த கிராம மக்களுக்கு பெண்களிடம் முடிதிருத்தம் செய்ய அச்சம். ஒழுங்காக செய்வார்களா? என்ற சந்தேகம்.
உடனே இருவரும் ஆண்களைப் போல் தங்கள் உடை, இரும்பு வளையல், நடை,பாவனை ஆகியவற்றை மாற்றிக் கொண்டனர். பெயரையும் தீபக் மற்றும் ராஜு என்று மாற்றிக் கொண்டனர்.
இந்த மாற்றத்தால் அவர்கள் நினைத்த வெற்றியும் கிடைத்தது. நாளடைவில் இரு சகோதரிகளும் பெண்கள் என்ற எண்ணம் அந்த கிராமத்தினருக்கு இல்லாமலே போனது.
அவர்கள் திறமையை கேள்விப்பட்டு, அக்கம்பக்கத்து கிராமங்களிலிருந்து எல்லாம் வந்து முடி திருத்திக் கொண்டு சென்றனர்.
இருவரும் சேர்ந்து தினமும் ரூ.400 வரை சம்பாதிக்கின்றனர். இது குடும்பத்துக்கும், தந்தையின் மருத்துவச் செலவுக்கும் கை கொடுக்கிறது என்கின்றனர்.
இவர்களை இந்திய அரசு கவுரவித்ததை பெருமையாகச் சொல்கிறார்கள்.
பக்கத்து கிராமத்தினர் எங்களை கேலி, கிண்டல் செய்வார்கள். அதை நாங்கள் பொருட்படுத்தாமல், வேலையில் தான் கவனம் செலுத்துகின்றோம் என்கின்றனர் இந்த தன்னம்பிக்கை சகோதரிகள்.
இல்லையில்லை…தன்னம்பிக்கை சகோதரர்கள்.