சென்னை
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அதிமுகவை விட்டு வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் அதிமுக – பாஜக – பாமக கூட்டணி நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் தர முடிவாகி உள்ளது. பாஜகவுக்கு 5 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டணிக்கு அதிமுக தோழமை கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
அதிமுக கூட்டணி கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களான தமிமுன் அன்சாரி (மனித நேய ஜனநாயக கட்சி), தனியரசு, (கொங்கு இளைஞர் பேரவை), மற்றும் கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகியோர் ஏற்கனவே இந்த கூட்டனிக்கு கண்டனம் தெரிவித்துளனர். முன்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்ததற்கு நேர் மாறாக ஈ பி எஸ் மற்றும் ஓ பி எஸ் நடந்துக் கொள்வதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
அதிமுக தோழமை கட்சிகள் மட்டுமின்றி அக்கட்சியிலேயே இந்த கூட்டனிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, “இந்த கூட்டணி அம்மாவின் விருப்பத்துக்கு நேர்மாறானது. இவ்வாறு கூட்டணி அமைத்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வத்தை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது.
அம்மாவின் விருப்பத்துக்கு எதிராக அமைந்த இந்த கூட்டனி 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்து மண்ணைக் கவ்வும். நான் அதிமுக வை விட்டு வெளியேறலாம் என எண்ணி இருக்கிறேன். எனது அடுத்த கட்ட முடிவு குறித்து நாளை அறிவிக்க உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.