மனநிம்மதி வேண்டுவோர் திருச்சி அருகிலுள்ள குணசீலத்தில் உள்ள பெருமாளைத் தரிசிப்போமே.
திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் பக்தரான குணசீலர், தனது ஆசிரமத்திற்குப் பெருமாள் வர வேண்டுமென வேண்டினார். சிலைவடிவில் அங்குப் பெருமாள் எழுந்தருள, தினமும் பூஜை செய்தார். ஒருநாள் குணசீலரின் குருவான தால்பியர் தன் இருப்பிடத்திற்கு அழைக்க, பூஜை செய்யும் பொறுப்பைச் சீடனிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார் குணசீலர்.
அன்றிரவு ஆசிரமத்திற்குள் வனவிலங்குகள் நுழைந்தன. பயந்து போன சீடன் அங்கிருந்து தப்பித்தான். பெருமாளின் சிலை மண்ணுக்குள் புதைந்தது.
இப்பகுதியை ஆட்சி செய்த ஞானவர்மரின் காலத்தில், அரண்மனைப் பசுக்கள் காட்டில் மேயும்போது, ஒரு இடத்தில் மட்டும் பசுக்கள் தினமும் பாலைச் சொரிந்தன. விஷயத்தை அறிந்த மன்னர் காட்டிற்கு வந்த போது, புற்றுக்குள் பெருமாள் சிலை இருப்பதாக அசரீரி ஒலித்தது. அந்த இடத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு கோயில் கட்டப்பட்டது.
கருவறையின் இருபுறமும் உத்தராயண, தட்சிணாயன வாசல்கள் உள்ளன. மனநோய் நீங்க இங்கு நோயாளிகள் இலவச மறுவாழ்வு மையம் உள்ளது.
காலை, மாலையில் நடக்கும் பூஜையின் போது பிரசாதமாகத் தீர்த்தம் தருகின்றனர்.
பகலில் நோயாளிகளைக் கோயிலில் அமரச் செய்து தீர்த்தத்தை முகத்தில் தெளிக்கின்றனர்.
உற்சவர் சீனிவாசர் சாளக்கிராம மாலையணிந்து செங்கோல் ஏந்தி காட்சியளிக்கிறார். புரட்டாசி பிரம்மோற்சவத்தின் போது குணசீலருக்குக் காட்சி தந்த வைபவமும், மாதந்தோறும் திருவோணத்தன்று கருடசேவையும் நடக்கிறது.
கோயில் முகப்பில் தீபத்துாணில் ஆஞ்சநேயர் சிற்பம் உள்ளது. வைகானஸ ஆகமம் எழுதிய விகனஸருக்கு சன்னதி உள்ளது. மனம், உடல் குறைபாடு உள்ளவர்கள் நிம்மதி வேண்டி இங்கு வருகின்றனர்.
எப்படிச் செல்வது:
திருச்சி – சேலம் ரோட்டில் 24 கி.மீ.,
விசஷே நாட்கள்: சித்ரா பவுர்ணமியில் தெப்பத்திருவிழா, புரட்டாசி பிரம்மோற்சவம், கோகுலாஷ்டமி, ஸ்ரீராம நவமி
நேரம்: காலை 6:30 – 12:30 மணி, மாலை 4:00 – 8:30 மணி
தொடர்புக்கு: 04326 – 275 210, 275 310, 94863 04251
அருகிலுள்ள தலம்: திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் 24 கி.மீ.,