தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு சுகாதாரம் மற்றும் மக்கள் நல் வாழ்வு துறை சார்பில் மாவட்ட வாரியாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கோவில் பிரசாத கடை தொடங்கி, உணவகங்கள், சமையல் எண்ணெய் விற்பனை கடைகள் என அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் பாரிமுனையில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் நடத்தப்பட்ட ரெய்டில் சில கடைகள் சீல் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரவு நேரங்களில் புகை போக்கிகள் இல்லாத மற்றும் சரியாக பொறுத்தப்படாத மாலை நேர உணவகங்கள் மற்றும் சுகாதாரமற்ற சாலையோர உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செய்தியாளர்கள் முன்னிலையில் சென்னை கோயம்பேடு மளிகை மொத்த விற்பனை கடைகளில் இன்று சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் பல்வேறு பொருட்களில் கலப்படம் இருப்பதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இருப்பினும், பொருட்களின் மாதிரியோ அல்லது அரசு மற்றும் தனியார் உணவு பரிசோதனை கூடங்களில் அந்த மாதிரிகளின் தரம் குறித்து அளிக்கப்பட்ட சான்றுகளையோ, அறிக்கைகளையோ அதிகாரிகள் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
கலப்படம் மொத்த விற்பனை நிலையங்களில் நிகழ்ந்ததா அல்லது வேறுயெங்கும் கலப்படம் செய்து இங்கு விற்பனைக்கு வந்ததா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் கலப்படம் குறித்த அதிகாரிகளின் குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படுமா என்பது குறித்து அதிகாரிகள் விளக்கமளித்ததாக தெரியவில்லை.