சென்னை: தரமற்ற உணவு மற்றும் உணவு பாதுகாப்பு தரச்சான்றிதழ் புதுப்பிக்கப்படாததால், மதுரவாயல் பகுதியில் செயல்பட்டு வரும் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைக்கு பூட்டு போட்டு உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை உள்பட பல இடங்களில் கிளைகளை பரப்பி உள்ளது சேலம் ஆர்.ஆர்.பிரியாணி. பொதுமக்களின் வரவேற்பு பெற்ற ஆர்ஆர் பிரியாணி கடைகளுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு செயல்பட்டுவரும் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடையிலும் சோதனை நடைபெற்றது. அதில், சில பொருட்கள் காலாவதியானதாக கூறப்படு கிறது. அத்துடன், உணவு பாதுகாப்பு தரச்சான்றினை புதுப்பிக்காமல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மதுரவாயல் சேலம் ஆர்ஆர் பிரியாணி உணவகத்தை பூட்டி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். முன்னதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், கடை நிர்வாகத்தினர் புதுப்பிக்காததால், விற்பனையை நிறுத்த உத்தரவிட்டு அதிகாரிகள் கடைக்கு பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.