உணவுப் பொருட்களின் தர நிர்ணய பரிசோதனையை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

உணவு தயாரிப்பு முறையில் சமரசம் செய்யக்கூடாது என்று கூறிய நீதிமன்றம் போதுமான சோதனையை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

பகல் நேர, முழு நேர உணவகங்களை விட இரவு நேர, துரித உணவகங்கள், சாலையோர கடைகள் வீதிக்கு இரண்டு உரிமத்துடன் நடத்தப்பட்டு வரும் நிலையில் மாலை 5 மணிக்குப் பின் எந்தவொரு சோதனையும் நடப்பதாக அறியப்படாத நிலையில் நீதிமன்றத்தின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பால் மற்றும் பால் பொருட்களின் தரம் குறித்து கவலை தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான பெஞ்ச் ஒவ்வொரு உணவுப் பாதுகாப்பு அதிகாரியும் (FSO) மாதத்திற்கு 25 உணவு மாதிரிகளை சோதனை செய்ய பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று கூறினர்.

டெல்லியின் மக்கள் தொகை மற்றும் தினசரி உணவுப் பொருள் தேவையைக் கொண்டு அவற்றை ஆய்வு செய்யும் சதவீதத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் டெல்லியில் உள்ள FSOக்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும், சோதனையின் அளவு, உணவு ஆய்வுக் குழுக்களின் எண்ணிக்கை, துறையின் வரவு செலவு திட்டம் ஆகியவற்றை விவரிக்கும் தனிப்பட்ட உறுதிமொழியை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் இதுதொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.