சென்னையில் பிரபல பிரியாணி கடையான எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட சுமார் 40 பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அந்த கடையை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதை அடுத்து குறிப்பிட்ட அந்த கடையை மூடிய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதேபகுதியில் மற்றொரு பிரியாணி கடைக்கு பூட்டி சீல் வைத்தனர்.

ஏற்கனவே, சைதாப்பேட்டையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த மட்டன் கடையில் கெட்டுப்போன ஆட்டுக்கால்களை கிலோ கணக்கில் கைப்பற்றினர்.

தவிர, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள உணவகங்களுக்கு விநியோகம் செய்ய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்திறங்கிய ஆயிரக்கணக்கான கெட்டுப்போன ஆட்டிறைச்சிகளை கைப்பற்றி அழித்தனர்.

அதேவேளையில், ஸ்வீட்ஸ், ஸ்னாக்ஸ், பேக்கரி வகைகள் உள்ளிட்ட சாப்பாடு மற்றும் உணவு வகைகள் அனைத்தும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பிரம்மாண்ட சமையல் கூடங்கள் அமைத்து தயார் செய்து சென்னை முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.

இந்த உணவு தயாரித்து விநியோகம் செய்யும் உணவுக் கூடங்களில் முறையான விநியோக சங்கிலி மேற்கொள்ளப்படுகிறதா என்று ஆய்வு செய்யவும் இது தொடர்பான விழிப்புணர்வை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சரிவர மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக அசைவப் பிரியர்களை குறிவைத்து நடத்தப்படும் உணவு வணிகத்தில், குளிரூட்டப்பட்ட பாதுகாப்பான விநியோக சங்கிலி பல நிலைகளில் கடைபிடிக்கப்படுவது இல்லை என்றும் இதை அந்தந்த மாவட்ட பொறுப்பு அதிகாரிகளும் உறுதி செய்வது இல்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

தவிர, உணவு பொருட்களை கையாளுபவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை எடுத்துரைக்கவும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறை அக்கறை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.

மாலை வேளைகளில் சாலையோரம் புற்றீசல் போல முளைத்திருக்கும் உணவகங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையின் அனுமதி தாராளமாக வழங்கப்படும் அதேவேளையில் சாலையில் போவோர் வருவோர் கண்களில் நெடி பறக்கும் வகையில் சமைப்பது மற்றும் சுகாதாரமற்ற இடத்தில் உணவு சமைப்பது ஆகியவற்றை கண்காணிக்க இரவு நேரங்களில் எந்த அதிகாரிகளும் இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோயில்களில் வழங்கப்படும் பிரசாதத்தில் கலப்படம் குறித்து தற்போது நாடு முழுவதும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் புளியோதரை உள்ளிட்ட பட்டை சாதம் விற்றுவந்த கோயில் நெய்வேதிய கடைகளை மூடியதுடன் நின்று போன அதிகாரிகளின் சோதனை லட்டு பிரசாதம் விநியோகம் செய்யும் இடங்கள் வரை நீளுமா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதுடன் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து உணவுத் துறையைச் சேர்ந்தவர்களை அழைத்து கண்காட்சி மற்றும் கற்றுத்தரங்கு நடத்தும் நிலைக்கு நாடு முன்னேறியுள்ளது.

உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு விநியோக வணிகத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் இந்த நிலையில் வட்டார, மாவட்ட, மாநில அளவில் உள்ள அதிகாரிகளின் திறனை அதிகரிக்கவும் உணவுப் பாதுகாப்புத் துறையில் மாற்றங்களை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.