திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளை முற்றிலுமாக அகற்றிவிட்டு, மார்ச் 2022க்குள் பீடம் அமைத்து மூடப்பட்ட சேமிப்பு கிடங்கிற்கு (CAP – covered and plinth) மாறப்போவதாக இந்திய உணவுக் கழகம் (FCI) நேற்று அறிவித்துள்ளது.
பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்த தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மழை மற்றும் பல்வேறு காரணங்களால் வீணாவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூலதன செலவு ஏதுமின்றி மத்திய, மாநில சேமிப்பு கழகங்கள் மற்றும் FCI சேமிப்பு கிடங்குகளின் உயரத்தை உயர்த்தியதன் மூலம் கூடுதலாக 69 லட்சம் மெட்ரிக் டன் (LMT) உணவுப்பொருட்கள் சேமிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், “பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, CAP திறனை 105 LMT யாக மாற்றுவதற்கான செயல் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன” என்று எஃப்சிஐ சிஎம்டி அதிஷ் சந்திரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கோதுமை உற்பத்தி 2020 ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021-22 ல் 11 சதவீதம் அதிகரித்துள்ளது, பஞ்சாப், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், குஜராத், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் கோதுமை உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.
அதேபோல் 2020 ஐ ஒப்பிடுகையில் 2021 கரிப் பருவத்தில் நெல் சாகுபடி 15 சதவீதம் அதிகரித்துள்ளது நாட்டின் மொத்த உற்பத்தி 894.32 லட்சம் டன்னாக உள்ளது.
நெல் உற்பத்தியில் தமிழ்நாடு, பஞ்சாப், பீகார், குஜராத், தெலுங்கானா, ஜார்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரகாண்ட் & உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தங்கள் முந்தைய சாதனையை முறியடித்துள்ளன என்றும் எஃப்சிஐ வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.