சென்னை: பள்ளிகள் மீது பாலியல் புகார்கள் தெரிவிப்பது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பத்மா சேஷாத்திரி, மகிரிஷி, ஜார்ஜ் பள்ளிகளைத் தொடர்ந்து, தற்போது செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மீதும் பாலியல் புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை அண்ணாமலைபுரத்தில் செயல்பட்டு வரும் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக குழந்தைகள் நல உரிமை ஆணையத்தில் முன்னாள் மாணவர்கள் 900 பேர் கையெழுத்திட்டு புகார் கடிதம் அளித்துள்ளனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கு அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது,
செட்டிநாடு பள்ளியில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கடந்த காலங்களில் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டது. பாலியல் ரீதியாகவும், உடல் அமைப்பையும் வைத்தும், ஆபாச வார்த்தைகளால் திட்டியும் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பல முறை புகார் தெரிவித்தும், பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்று பாதிக்கப்படும் மாணவர்களை அழைத்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முழுமையாக பள்ளி நிர்வாகமே பொறுப்பாக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளதுடன், பழைய புகார்கள் குறித்தும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இந்த புகார் அடிப்படையில், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரும் ஜூன் 8ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.