ஹஜிபூர்:

‘‘வயதான மாடுகளை ஆர்எஸ்எஸ், பாஜ தலைவர்களின் வீட்டு வாசலில் கட்டுங்கள். அப்போது தான் அவர்களது பாசம் என்ன என்று பார்க்கலாம். வயதான தாய் பசுக்களை அவர்கள் விரும்ப மாட்டார்கள். வேண்டுமானால் இதை பரிசோதனை செய்து பாருங்கள்’’ என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியினருக்கு லாலு பிரசாத் யாதவ் ஆலோசனை வழங்கினார்.

நலந்தா மாவட்டம் ராஜ்கிரியில் நடந்த கட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் இவ்வாறு பேசினார். மேலும், அவர் பேசுகையில் ‘‘பாஜ தலைவர்கள் பெரும்பாலும் பசு பாதுகாப்பு குறித்து பேசுகின்றனர். ஆனால், ஷூ, செருப்பு போன்று மாட்டு தோல்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அவர்கள் அணிகிறார்கள்’’ என்று கூறியிருந்தார்.

இவரது பேச்சுக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் உள்ள பாஜ தலைவர்கள் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில லாலுவின் ஆலோசனையை தீவிரமாக எடுத்துக் கொண்ட அவரது கட்சியினர் சிலர் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த பாஜ தலைவர் சந்தேஷ்வர் பார்தி வீட்டு வாசலில் மாடுகளை கட்டினர்.

இது தொடர்பாக லாலுபிரசாத் யாதவ் உள்பட அடையாளம் தெரியாத 5 பேர் மீது ஹஜிபூர் சிவில் நீதிமன்றத்தில் பார்தி வழக்கு தொடர்ந்துள்ளளார். லாலு உத்தரவிட்ட பிறகு தான் கால்நடைகளை இவ்வாறு எனது வீட்டில் முன் கட்டிவிட்டுச் சென்றுள்ளனர் என்று அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.