சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கிடையாது என்றும், தலைவர் ராமதாஸ்தான் அதுகுறித்து அறிவிப்பார் என பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாஜக, முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தல் வெற்றிக்கு பிறகு நாங்கள்தான் அறிவிப்போம் என பிரச்சினை செய்து வரும் நிலையில், தற்போது பாமகவும் போர்க்கொடி தூக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜக, பாமக, தேமுதிக உள்பட சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த கட்சிகள் அனைத்தும், கூட்டணி தர்மத்துக்கு எதிராக பேசி வருகின்றன. அதிமுகவில், ஜெ.மறைவுக்கு பிறகு, திறமையான ஒரே தலைவர் இல்லாததை கருத்தில்கொண்டு, தங்களது ஆட்டங்களை தொடர்ந்து வருகின்றன. அதிமுக சார்பில், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பாஜக சமீப நாட்களாக, அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான் அறிவிக்கும் என்றும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகே தெரிவிக்கும் என சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அதிமுக அதற்கு மறுப்பு தெரிவித்து வருவதும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது பாமகவும் தன் பங்குக்கு ஆட்டத்தை தொடங்கி உள்ளது. அதிமுக – பாமக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாமக நிறுவனர் ராமதாஸ்தான் அறிவிப்பார் என ஜிகே மணி கொளுத்தி போட்டுள்ளார். இது அதிமுக கூட்டணியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.