டில்லி
வரும் 2024 ஆம் வருடத் தேர்தல் வெற்றி மீது இப்போதிலிருந்தே குறி வையுங்கள் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களாக டில்லியில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபியாஸ் வர்கா என்னும் ஒரு பயிற்சி முகாம் நடந்தது, டில்லியில் நடந்த இந்த முகாமில் மேற்கு வங்கத்தில் பாஜகவின் நிலை மற்றும் நமோ செயலி விளக்கம் ஆகியவை விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளார்.
பிரதமர் மோடி தனது உரையில், “எப்போதும் நேர்மறையாக இருங்கள். எதிர்மறை எண்ணங்கள் உங்களை தாக்க விடாதீர்கள். நீங்கள் தோல்வி அடைந்த இடத்தில் இருந்து வெற்றி பெற முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு எதிரானவர்களையும் உங்கள் வழிக்கு கொண்டு வர முயலுங்கள். வரும் 2024 ஆம் வருட தேர்தல் வெற்றிக்கு இப்போதிலிருந்தே குறி வையுங்கள்
நாட்டை கட்டமைக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து உழைத்தால் தான் நாடு முன்னேற்றமடையும். இதற்கு இடையில் நீங்கள் உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். அத்துடன் குடுமத்தினருடன் தினம் சிறிது நேரமாவது கழிக்க வேண்டும். உங்கள் வெற்றிக்கு உதவியவர்களையும் உங்கள் தொகுதி மக்களையும் மறவாமல் அவர்களுக்கு உதவ வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.