திருப்பூர்
தேர்தல் பறக்கும் படையினர் கோவிலில் பிச்சை எடுக்கும் பெண்ணிடம் ரூ1.5 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தல் பறக்கும் படையினர் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் குணசேகர் தலைமையில் நல்லூர் தேவாலயம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 36 வயது மதிக்கத்தக்கப் பெண் மது போதையில் இருந்ததோடு இடுப்பில் 3 கட்டுகள் பணம் வைத்திருந்தார்.
இது குறித்து அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவித்தார்.பெண்ணிடம் இருந்த பணத்தை வாங்கி எண்ணிப்பார்த்தபோது ரூ.1½ லட்சம் இருந்தது தெரியவந்தது. அவர் தான் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் என்றும், பண்ணாரி அம்மன் கோவிலில் பிச்சை எடுத்த பணம் என்றும் கூறினார்.
அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி உதவி ஆணையாளர் தங்கவேல் ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்தில் சேர்த்தனர். மதுபோதையில் இருந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்துத் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.