டில்லி
நிபா வைரசால் தாக்கப்பட்ட நோயாளிக்குச் சிகிச்சை அளித்து அதே வைரசால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த கேரள செவிலியர் லினிக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1973 ஆம் வருடம் சிறந்த சேவை செய்யும் செவிலியருக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. கடந்த 19 ஆம் நூற்றாண்டில் செவிலியராக இருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பல நோயாளிகளுக்கு இரவு பகல் பாராமல் சேவை செய்தவர் ஆவார்.. இவர் 1820 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பிறந்த தினம் சர்வதேச செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெயரால் வழங்கப்படும் இந்த விருது சிறந்த சேவை செய்யும் செவிலியருக்கு ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த விருது பெற இந்த வருடம் தேர்வு செய்யப்பட்டவர்களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் லினியும் ஒருவர் ஆவார். இவர் கடந்த வருடம் நிபா வைரசால் தாக்கப்பட்ட நோயாளிக்குச் சிகிச்சை அளித்து சேவை செய்தார்.
நிபா வைரஸ் தொற்றும் தன்மை உடையது என்பதால் லினிக்கும் அந்த வைரஸ் தொற்றிக் கொண்டது. இவர் கேரள மாநிலம் பேரம்பரா பகுதியில் உள்ள ஈ எம் எஸ் கூட்டுறவு மருத்துவமனையில் பணி புரிந்து வந்தார். நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் பிழைக்க 70% மட்டுமே வாய்ப்புள்ளது. இவர் உடல்நிலை நாளுக்கு நாள் சீர் கெட்டு கடந்த வருடம் மே மாதம் 21ஆம் தேதி மரணம் அடைந்தார்.
இவருடைய தியாகத்தை போற்றும் வகையில் இவருக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்பட உள்ளது. இந்த வருடம் இந்த விருதைப் பெற்ற 36 பேரில் லினியும் ஒருவர் ஆவார். ஜனாதிபதி ராம் கோவிந்த் அளித்த இந்த விருதை லினியின் சார்பில் அவருடைய கணவர் சஜீஷ் புத்தூர் பெற்றுக் கொண்டார்