சென்னை:

சட்டமனறத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் முதல்வர் நாற்காலியை பிடிக்க முடியாது என்பது தெளிவாகிவிட்டது என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவி ஏற்றார். அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மைய நிரூபிக்க 15 நாட்களை அவகாசம் வழங்கி கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க மட்டுமே வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதனால் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் எதிர்த்து வாக்களிப்பதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறை நன்றாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

‘‘கட்சி கொண்டு வரும் இந்த வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதிருப்தி எம்எல்ஏ.க்கள் இழக்க நேரிடும். மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிக எம்எல்ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தால் மட்டுமே தனி அணியாக கருதப்படுவர்’’ என்று நாடாளுமன்ற விவகாரத் துறை முன்னாள் செயலாளர் அப்சல் அமானுல்லா தெரிவித்துள்ளார்.

குரல் வாக்கெடுப்பு அல்லது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டுமே ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ.க்கள் பதவி தப்பும் வாய்ப்பு இருக்கிறது.

சிபிஐ தேசிய செயலாளர் ராஜா கூறுகையில், ‘‘எடப்பாடிக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கியிருப்பதன் மூலம் பன்னீர்செல்வத்துக்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்தையே காட்டுகிறது. அவருக்கு 8 முதல் 10 எம்எல்ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. சசிகலா தரப்புக்கு 124 எம்எல்ஏ.க்கள் ஆதரவு உள்ளது. ஒரு மாத காலமாக நடந்து வந்த நாடகத்துக்கு தற்போது முடிவு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும், இந்த 15 நாட்களில் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் சசிகலா அணிக்கு திரும்பி எடப்பாடிக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் நிலை உருவாகிவிடும். இது பன்னீர்செல்வத்துக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், ‘‘தமிழகத்தில் அதிமுக.வின் நடக்கும் பிரச்னைகள் அவர்களது உட்கட்சி விவகாரம், பன்னீர்செல்வம் பதவியை இழப்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை’’ என்று தெரிவித்தார்.

அதனால் பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வர் பதவிக்கு வருவது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது தெளிவாகிவிட்டது.