சென்னையில் 2வது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் இடையேயான வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் வரையில் மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.

கோடம்பாக்கம் முதல் சுரங்க வழிபாதைக்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு கட்டமாக, தி. நகர் பனகல் பூங்கா – கோடம்பாக்கம் வரையில் மொத்தம் 1,254 மீட்டர் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதற்காக ‘பெலிகன்’ மற்றும் ‘பிகாக்’ ஆகிய இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மேம்பாலங்கள், மருத்துவமனைகள் அல்லது பழைய பாரம்பரிய கட்டிடங்கள் போன்ற முக்கியமான கட்டமைப்புகளைக் கடக்கும்போது, செயல்முறையை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் முன்பு, தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டி மாம்பலம் நெடுஞ்சாலை – வடக்கு உஸ்மான் சாலைக்கு இடையே சுரங்கம் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெறுகிறது.

அப்போது மாம்பலம் லாலா தோட்டம் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் தரைப்பகுதி திடீரென உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டது.

இந்த வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் மூன்று நாட்கள் கழித்து அந்த வீட்டின் உரிமையாளர் நேற்று வந்து பார்த்தபோது தரை உள்வாங்கியது தெரியவந்தது.

நெரிசலான பகுதியில் தொடர் வீடுகளை கொண்ட இந்த தெருவில் 100 சதுர அடி அளவில் வீடு உள்வாங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் வந்து பார்த்து அந்த வீட்டை சீரமைத்து தர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறியுள்ளனர்.

அதுவரை அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அருகில் உள்ள மற்ற இரண்டு குடும்பங்களையும் வேறு மாற்று இடத்தில் தங்க வைத்துள்ள மெட்ரோ நிர்வாகம் அதற்கான வாடகை உள்ளிட்ட இதர செலவுகளை ஏற்பதாக உறுதியளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த இடத்தை ஆய்வு நடத்திய அதிகாரிகள் இதற்கு முன் கிணறு இருந்த இடத்தின் மீது வீடு கட்டியிருந்த நிலையில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் செல்லும் பாதையில் மண் கலவை வெளியேறியதால், இப்பள்ளம் ஏற்பட்டுள்ளது.

சுவர்களில் விரிசல் விழாததால் அருகில் இருந்தவர்களுக்கு இது தெரியவில்லை அதேவேளையில் இந்த சம்பவத்தில் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்த வீட்டில் வசிப்போர் அனைவரும், பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளம் விழுந்த இடத்தில் கான்கிரீட் கலவை கொட்டி நிரப்பப்பட்டு உள்ளது.

மேலும், சுரங்கம் தோண்டும் இயந்திரமும், அந்த இடத்தை விட்டு கடந்துவிட்டது.

அதேபோல் சுரங்கம் தோண்டு இயந்திரங்கள் செல்லும் பாதையின் 50 மீட்டர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டிடங்கள் விரிசல் ஏற்படுகிறதா எனவும் நில அதிர்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.