சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில், நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.449 கோடி நிதி வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது என என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில், நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.449 கோடி நிதி வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது. இந்த நிதியைக் கொண்டு ஏரிகள், கால்வாய்கள் சீரமைக்கப்படும் இடங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்தப் பகுதிகளில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
“உலக வங்கி நிதியுடன் மதுரை மண்டலத்தில் சித்தார், பச்சையாறு, கீழ் தாமிரபரணி, நம்பியாறு, கல்லூர், கடனாநதி ஆகிய இடங்களிலும் சென்னை மண்டலத்தில் ஆரணியாறு, கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் ஆறு ஆகிய இடங்களிலும் ரூ. 449.59 கோடியில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்,” என தமிழக அரசு தெரிவித்துள்ளது. உலக வங்கி நிதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெறும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ரூ.1.09 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்தாண்டு இறுதியில் பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.280 கோடி, 2021 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.350 கோடி என மொத்தம் ரூ.630 கோடி, உலக வங்கி நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியது.
ஆனால், தமிழகத்தில் உலக வங்கி நிதியில், நீர்வள நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்புப் பணிகள் நடைபெறும் இடங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு மட்டுமே நிதி வழங்க முடியும் என தெரிவித்ததுடன், அந்த இடங்களையும் அடையாளம் கண்டு அவற்றை சீரமைக்க அவசரகால சிறப்பு நிதியாக ரூ.449 கோடியே 59 லட்சம் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதுபோல உலக வங்கி நிதி ஒதுக்கும்போது, ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்புப் பணிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்து அறிக்கை அளிக்க வேண்டும். அதன்படி, உலக வங்கி நிதியுடன் மதுரை மண்டலத்தில் சித்தார், பச்சையாறு, கீழ் தாமிரபரணி, நம்பியாறு, கல்லூர், கடனாநதி ஆகிய இடங்களிலும் சென்னை மண்டலத்தில் ஆரணியாறு, கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் ஆறு ஆகிய இடங்களிலும் ரூ.449.59 கோடியில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனிடையே, இந்தப் பகுதிகளில், ஏரிகள், கால்வாய்களில் சீரமைப்புப் பணிகள் நடைபெறும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ரூ.1 கோடியே 9 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.