புதுச்சேரி:  சாத்தனூர் மற்றும் வீடூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகம் வெளியேற்றப்படுவதால் தென்பெண்னையாறு கரையோர மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்குமாறு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.  தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக அணைகளுக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சாத்தனூர் மற்றும் வீடுர் அணைகளும் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கரையோர மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்குமாறு புதுச்சேரி மற்றும் வடமாட்ட ஆட்சியர்களும் அறிவித்து உள்ளனர்.

. 119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.75 அடியாக உள்ளது. அணையில் 7,041 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.  இதனால், தற்போது அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது  தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும். இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பதால்  திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றுப்பகுதி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.

அதுபோல, புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சாத்தனூர் மற்றும் வீடூர் அணையிலிருந்து உபரி நீர் அதிகம் வெளியேற்றப்படுவதால் காரைக்கால் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கும் அபாய எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டது.

சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் நிவாரண முகாம்களுக்குச் செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். சங்கராபரணி ஆற்றங்கரையோர மக்கள், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி இருப்பதுடன், முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அங்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில்  புதுச்சேரியில் 3 செ.மீ மழையும், காரைக்காலில் 5 செ.மீ மழையும் பெய்துள்ளது. மழை நீடித்து வருவதால் வீடூர் அணையில் நீர் நிரம்பி வெள்ளம் வரும் காரணத்தால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காரைக்கால் மற்றும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக இந்த மாவட்டங்களில் வீடுகள், கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. அதன் முன்னெச்சரிக்கையாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.