கொழும்பு,

லங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரி காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அந்நாட்டு மக்களுக்கு உதவ, இந்தியா நிவாரண பொருட்களை கப்பலில் அனுப்பி வைக்கிறது.

தென்மேற்கு பருவமழை காரணமாக இலங்கையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் களுத்துறை, புளத்சிங்கள பகுதிகளில் பெய்துவரும் கன மழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் ஏராளமான பொதுமக்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெள்ள சீற்றத்தை தொடர்ந்து சுமார் 60 ஆயிரம் பொதுமக்கள் அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறி அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், நிலச்சரிவு காரணமாக 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் இலங்கை அரசு  தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  நிலச்சரிவில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க அண்டை நாடுகளின் உதவியை இலங்கை கோரியிருந்தது.

அதையடுத்து இந்திய அரசு பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களுடன் கப்பல் ஒன்றை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

இந்த தகவலை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையர் உறுதி செய்துள்ளார்.

மேலும், மற்றொரு கப்பல்  நிவாரணப் பொருட்களுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வந்தடையும் என்றும் கூறியுள்ளார்.