சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் இன்று காலை 7 மணி முதல் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையெங்கும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சென்னை மாநில வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று காலை பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் மிதந்தது. வில்லிவாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்பட பல இடங்களில் இடிமின்னலுடன் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் புழல். செங்குன்றம். அலமாதி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், மத்திய சென்னை பகுதி, தென்சென்னை பகுதிகளிலும் பல இடங்களில் மழை கொட்டியது.
சென்னையில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளை வாகனங்களை செலுத்த முடியாமல், சாலையோரங்களில் ஒதுங்கினர். மழையையொட்டி பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
சென்னை உள்பட 11 மாவட்டங்களில் 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ,கள்ளக்குறிச்சியில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடலூர், ஈரோடு ,சேலம் மாவட்டங்களிலும் 2 மணிநேரத்திற்கு மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலூர் ,விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர் ,அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை ,சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.