தென்காசி: குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க  மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும்  கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இன்று 2வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

இந்தியாவில் பொதுவாக ஜூன் முதல் செப். மாதம் வரை தென்மேற்கு பருவமழை இருக்கும். வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் இந்த பருவமழை தென்மேற்கு பவருமழை என்று அழைக்கப்படுகிறது. இது  மெல்ல வடக்கு நோக்கி நகரும். தொடர்ந்து ஜூலை இரண்டாவது வாரத்தில் நாடு முழுக்க பருவமழையைக் கொடுக்கும். இந்த நிலையில் கேரளாவில்  மே 30ந்தேதி அன்றே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கேரள, கர்நாடக மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பொழிந்து வருகிறது. இதனால், அருவிகள், நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், குற்றாலத்திலும் சீசன் களைகட்டி உள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் நீர் வரத்து அதிகமாக இருந்தால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தடை நீக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டு அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

குற்றாலத்தில் சீசன் நன்றாக இருப்பதால், நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தருகின்றனர். ஆனால்,  நேற்று  இரவு நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  தொடர்ந்து  மழை பெய்து வருவதால், அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு தெரியாத அளவுக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்தது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தால் தண்ணீர் படிகள் வழியாக வழிந்தோடியது. இதேபோல் புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக நேற்று இரவு முதல் இன்று  2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால்  சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் அருவிகளை பார்த்துவிட்டு திரும்பிச் சென்றனர். நீர்வரத்து குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.