சென்னை
வரும் ஜூன் 26 ஆம் தேதி முதல் சென்னை பாரிஸ் இடையே மீண்டும் விமான சேவை தொடங்குகிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்திலும் பிரான்ஸ் 4 ஆம் இடத்திலும் உள்ளது. இந்தியாவில் இதுவரை 2.99 கோடி பேர் பாதிக்கபட்டு அதில் 3.89 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் 57.57 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் 1.10 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கடும் தடை விதிக்கப்பட்டது. இரண்டாம் அலை கொரோனாவால் இந்தியாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டதால் இந்தியாவில் இருந்து பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டது. அதையொட்டி சென்னை – பாரிஸ் இடையே ஆன விமான போக்குவரத்து சேவைகளை ஏர் ஃபிரான்ஸ் நிறுவனம் ரத்து செய்தது.
தற்போது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது. இதே நிலை பிரான்ஸ் நாட்டிலும் உள்ளது. இதையொட்டி பிரான்ஸ் நாட்டுக்கு வெளிநாட்டில் இருந்து வருவோர் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வகையில் சென்னை பாரிஸ் இடையே மீண்டும் விமானச் சேவையை ஏர் ஃபிரான்ஸ் நிறுவனம் வரும் 26 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.