மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தியாவிலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்து புனே, லே, மும்பை செல்ல வேண்டிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.

இந்தியா முழுவதும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியா விமானங்கள் வழக்கம்போல் இயங்குவதாகத் தெரிவித்துள்ளது. இண்டிகோ, ஆகாசா ஏர் நிறுவனங்களும் பயணிகள் தங்களது விமானப் புறப்பாடு குறித்த தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன. டெல்லி விமான நிலையமும் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அவுட்லுக், டீம்ஸ் உள்ளிட்ட சேவைகளில் வியாழக்கிழமை முதல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்னஞ்சல் சேவைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. கோளாறைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிறுவனங்களின் தகவல் தொடர்பு மற்றும் செயல்பாடுகள் டிஜிட்டல் சேவைகளைச் சார்ந்திருப்பதால், பயணிகள் விமான நிலையத்துக்குப் புறப்படும் முன்பு தங்களது விமானத்தின் நிலையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.