உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள மின்சாரக் கார்கள் மூலம் தினமும் 12 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் பயன்பாடு தவிர்க்கப்படுவதாக ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பான T&E தெரிவித்துள்ளது. இது உலகின் மொத்த எண்ணெய் பயன்பாட்டில் 1.2 சதவீதமாகும்.
ஐநா காலநிலை மாற்ற மாநாடு (COP31) துருக்கியின் அன்டாலியா நகரில் இந்த வாரம் தொடங்க உள்ள நிலையில், T&E அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு தினமும் 2.15 லட்சம் பேரல் எண்ணெய் மட்டுமே மின்சார வாகனங்களால் சேமிக்கப்பட்டு வந்தது. தற்போது இது 5 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

உலகில் தற்போது பயன்பாட்டில் உள்ள மொத்த வாகனங்களில் மின்சாரக் கார்கள் 4.2 சதவீதம் மட்டுமே இருந்தாலும், புதிதாக விற்பனையாகும் கார்களில் 25 சதவீதம் மின்சாரக் கார்களாக உள்ளன. 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அளவு வெறும் 6.6 சதவீதமாக இருந்தது.
தற்போதைய கொள்கைகள் தொடர்ந்தால், 2034ஆம் ஆண்டில் மின்சார வாகனங்களால் தினமும் 58 லட்சம் பேரல் எண்ணெய் பயன்பாடு தவிர்க்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
கார்கள் மட்டுமின்றி, மின்சாரப் பேருந்துகள் மற்றும் லாரிகளின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. உலகின் மொத்த பேருந்துகளில் 5 சதவீதம் மின்சாரப் பேருந்துகளாக உள்ளன. மின்சார லாரிகள் மொத்த எண்ணிக்கையில் 1 சதவீதம் மட்டுமே இருந்தாலும், சில நாடுகளில் புதிதாக விற்பனையாகும் லாரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை மின்சார லாரிகளாக உள்ளன.
மின்சாரப் பேருந்துகள் மற்றும் லாரிகள் மூலமாகவும் தினமும் சுமார் 3.2 லட்சம் பேரல் எண்ணெய் பயன்பாடு தவிர்க்கப்படுகிறது.
உலகின் மொத்த எண்ணெய் பயன்பாட்டில் சாலைப் போக்குவரத்துத் துறை மட்டும் பாதியளவைப் பயன்படுத்துகிறது. எனவே, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் கச்சா எண்ணெய் மீதான சார்பைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்தவும் முடியும் என T&E தெரிவித்துள்ளது.