சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமான போக்குவரத்தை தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் சக்கரபாணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பெங்களூரு – சேலம் – கொச்சி வழித்தடத்தில் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது சேவையை துவங்கியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கமலாபுரத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே ப்ளூ ஜெட் விமானம் தனது சேவையை வழங்கிவந்தது.
கொரோனா கட்டுப்பாடுகளை அடுத்து இந்த சேவை நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இரண்டரை ஆண்டுகள் கழித்து சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவை துவங்கியுள்ளது.
பெங்களூரு, சேலம், கொச்சி வழித்தடத்திலும், அதேபோல் கொச்சி, சேலம், பெங்களூரு வழித்தடத்திலும் புதன் மற்றும் வெள்ளி கிழமைகள் தவிர்த்து வாரத்திற்கு 5 நாட்கள் விமானம் இயக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவையை வரும் 29ம் தேதி முதல் தொடங்க உள்ளது.