டில்லி

மன் ஏர்வேஸ் நிறுவன துணை விமான ஓட்டியிடம் உரிமம் இல்லாததால் டில்லியில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

சாலைகளில் வாகனம் செலுத்துபவர்கள் உரிமம் எடுத்து வர மறந்து போலீசாரிடம் மாட்டிக் கொள்வதுண்டு.  ஆனால் விமான ஒட்டி ஒருவர் உரிமம் எடுத்து வராமல் விமான நிலைய அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்ட சம்பவம் டில்லியில் நடந்துள்ளது.

விமான நிலைய அதிகாரிகள் அவ்வப்போது விமான ஓட்டிகளிடம் உரிமம் உள்ளதா என பரிசோதனை செய்வது வழக்கம்.  சோதனையின் போது உரிமம் இல்லாத விமான ஓட்டிகள் உள்ள விமானம் வானில் பறக்க தடை செய்யப்படும்.  இது போல ஒரு சோதனை சமீபத்தில் நடந்து ஒரு துணை விமானியிடம் உரிமம் இல்லாதது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகளில் ஒருவர், “எப்போதாவது தான் நாங்கள் விமான ஓட்டிகளின் உரிமத்தை பரிசோதனை செய்வது வழக்கம்.   இதுவரை எந்த விமான ஓட்டியும் உரிமம் இல்லாமல் இருந்தது இல்லை.  ஆனால் முதல் முறையாக ஓமன் ஏர்வேஸ் நிலைய விமானத்தின் துணை விமானியிடம் உரிமம் இல்லை.

பறப்பதற்கு தயார் நிலையில் இருந்த அந்த விமானம் டில்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது.   அதன் பின் அந்த நிறுவனம் அந்த விமான ஓட்டியின் உரிமத்தை எங்களுக்கு ஃபாக்ஸ் மூலம் அனுப்பியது.  அதை சரிபார்த்த பின் விமானம் பறக்க அனுமதிக்கப்பட்டது.  இதனால் அந்த விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது” என தெரிவித்தார்.

இது குறித்து ஓமன் ஏர்வேஸ் எதுவும் சொல்ல மறுத்துள்ளது